ஜாதி ஒழிப்பு பற்றி சபாஷ்நாயுடு கமல் பேசலாமா?

kamal-hassanசென்னை: நாட்டில் ஜாதி ஒழியவில்லை என்று ஆதங்கம் தெரிவிக்கும் நடிகர் கமல்ஹாசனின் அடுத்த திரைப்பட பெயர் ‘சபாஷ் நாயுடு’.

முரண்களின் மொத்த உதாரணமாக இருந்த அவரது நேற்றைய ‘பிக்பாஸ்’ பேட்டியின் ஒரு பானை சோற்று, ஒரு சோறு பதம்தான் இந்த தகவல்.

‘சேரி பிஹேவியர்’ என்று காயத்ரி ரகுராம் உதிர்த்த வார்த்தை, ஜாதிய பிளவை அங்கீகரிக்கும் செயல் என்பதை ஒப்புக்கொள்ள பெரிய மனது இல்லாமல் போனது கமலுக்கு. நிருபர்கள் இதுபற்றி கேட்ட கேள்விக்கு, நாட்டுக்குள் ஜாதி என்ற வார்த்தையை நீக்க முடிகிறதா, பயன்படுத்தாமல்தான் இருக்கிறார்களா, அதன் பிரதிபலிப்புதான் பிக்பாஸ் என்று சப்பைகட்டு கட்டினார்.

அக்கறை

அடடே, ஜாதி ஒழிப்பு மீது ‘தேவர் மகன்’ ‘நாயகனுக்கு’த்தான் எவ்வளவு அக்கறை, ஆதங்கம்! ‘போற்றிப்பாடடி மண்ணே, தேவர் காலடி மண்ணே’ பாடலால் மண்ணில் உருண்டவர்கள் எத்தனை பேர் என அறிந்தும் இதுவரை ஆதங்கம் தெரிவிக்காத கமல்தான், இப்போது ஜாதி ஒழிப்பு பற்றி வரிந்து கட்டுகிறார்.

தீயை தீயால் அணைப்பீர்களா?

ஜாதியை தெருவில் பேசுகிறார்கள் என்றால், பிக்பாஸ் அரங்கத்திலும் அதையே பேசுவது எப்படி நியாயமாகும்? என்பது சர்வதேச அரசியல் கற்றவர்களுக்கு கூட விளங்காத சூத்திரம்தான். அரசியல் பேசினாலே அடிதடியாகிவிடும் என்று நினைத்து, “இங்கு அரசியல் பேசாதீர்கள்” என சலூன் கடைகளில் எழுதிப்போடும் தேசத்தில், பேசிப்பேசியே ஜாதி தீயை அணைக்கப்போகிறேன் என்கிறாரா கமல்?

ஜாதிப்பற்றா?

‘அன்பேசிவம்’ என்று உச்சரிப்பவரை வில்லனாகவும், வைணவர்களை, சைவர்கள் கல்லால் எறிந்து, கடலில் கட்டி மூழ்கடிப்பார்கள் என்றும், காட்சிகள் அமைத்தது மதம் சார்ந்ததா? அல்லது ஒரு ஜாதி பாசத்தாலா என்ற சந்தேகத்திற்கு இன்னும் ரசிகர்கள் விடைதேடிக்கொண்டிருக்கும்போது ஜாதி ஒழிப்பு பற்றிய கமல் ஆதங்கத்தை, சிம்பிளாக சொன்னால், பிக்ஜோக்!

சபாஷ் நாயுடு

இதையெல்லாம் செய்து, நாட்கள் பல ஆகிவிட்டன. வருடங்கள் உருண்டோடிவிட்டன, இது புதிய கமல், பிக்பாஸ் கமல் என்று நினைத்தாலும் அங்கு எஞ்சி நிற்பது ஏமாற்றமே. கமல் இயக்கி நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பெயர் ‘சபாஷ் நாயுடு’. ஜாதியை தூக்கி பிடிக்காதீர்கள் என பலர் முறையிட்டும் பெயரை மாற்ற மாட்டேன் என அடம்பிடிக்கும் கமலுக்குத்தான் தெருவில் ஜாதி சண்டை போடுவோர் மீது ஆதங்கமாம்.

இதே வேலைதான்

எப்போதுமே பிள்ளையையும், கிள்ளிவிட்டு பிறகு தொட்டிலையும் ஆட்டும் நடவடிக்கைகளில் கை தேர்ந்தவர் கமல் என்பதற்கு இப்படி பல உதாரணங்கள் உள்ளன. கஞ்சா கருப்பு கெட்ட வார்த்தை பேசுவதை மியூட் செய்து ஒளிபரப்பிய பிக்பாஸ், காயத்ரியின் ‘சேரி பிஹேவியர்’ பேச்சை அப்படியே ஒளிபரப்பியபோது, நிகழ்ச்சிக்கு சென்சாரே இல்லை என்று கமல் கூறியது யார் காதில் பூ சுற்ற?

tamil.oneindia.com

TAGS: