மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது ஏன்? முதல்வர் எடப்பாடியின் விளக்கம் இதுதான்!

valarmathi

சென்னை: மக்களை தூண்டிவிட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கல்லூரி மாணவி வளர்மதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதி நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாப்போம் என்னும் கோஷத்துடன் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து வந்தார்.

இவர் நக்சலைட்டுகள் இயக்கத்திற்காக ஆட்களை சேர்ப்பதாகக் குற்றம்சாட்டி சேலம் போலீசார் கைது செய்து கடந்த 13ம் தேதி சிறையில் அடைத்தனர். இதையடுத்து மாணவி வளர்மதி மீது திடீரென குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் இதுகுறித்து விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 6 வழக்குகள் இருக்கின்றன. ஒரு வழக்கு அல்ல 6 வழக்குகள் இருக்கின்றன. அதைப்பற்றி எல்லாம் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். 6 வழக்குகள் பல்வேறு நிலைகளில் இருக்கின்றன. சேலம் மாநகர், கன்னங்குறிச்சியில் கடந்த 12.7.2017 அன்று, பெண்கள் அரசு கலைக் கல்லூரி அருகில் பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாவட்டப் பொறுப்பாளரும் மற்றும் இயற்கை பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான செல்வி வளர்மதி மற்றும் திருமதி ஜெயந்தி ஆகியோர் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக 15.7.2017 அன்று நெடுவாசலில் நடக்கவுள்ள போராட்டத்திற்கு பெருமளவில் பங்கேற்குமாறு கோரியும், பொதுமக்களை மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தூண்டிவிடும் விதத்திலும், பொதுமக்களுக்கும், மாணவிகளுக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், ஆட்சேபகரமான வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மாணவிகளிடையேயும், பொதுமக்களிடையேயும் விநியோகம் செய்து, அவர்களை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட தூண்டியதற்காக அவ்விருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த துண்டுப் பிரசுரங்களைக் கைப்பற்றி, இது தொடர்பாக கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு (கு.எண்.292/2017) பதிவு செய்து, வளர்மதியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். பின்னர் ஜெயந்தி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

வளர்மதி, ஏற்கெனவே, கடந்த 7.8.2014 மற்றும் 8.8.2014 ஆகிய நாட்களில், புரட்சிகர மாணவர் இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம் போன்ற இடதுசாரி இயக்கங்களின் ஆதரவுடன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்லூரி மற்றும் விடுதி கட்டணங்களைக் குறைக்கக் கோரி, மாணவர்களை தூண்டி வகுப்புகளை புறக்கணிக்க செய்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போது அனுமதியின்றி பல்கலைக்கழகத்திற்குள் செல்ல முயன்று, அங்கு பாதுகாப்பு அலுவலில் இருந்த பாதுகாவலர்களை மிரட்டியது தொடர்பாக அவர் மீது சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் (கு.எண்கள்.218/2014 மற்றும் 219/2014) பதிவு செய்யப்பட்டு, வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.

சேலம் மாநகரில், கடந்த 16.3.2017 அன்று இந்திய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சாலமன் என்பவர் மத்திய தரை வழிப்போக்குவரத்து துறை அமைச்சர், சேலம் சென்ற போது ஆட்சேபகரமாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொன் ராதாகிருஷ்ணன் சேலம் வந்த போது அவர் மீது செருப்பு வீசப்பட்டது. அதற்கு அந்த மாணவி அப்போதும் இதே நிலையை தான் தொடர்ந்தார்.

கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை விடுதலைச் செய்யக் கோரி, சேலம், நான்கு ரோடு சந்திப்பில் வளர்மதி உட்பட 25 நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, போக்குவரத்தை தடை செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் (கு.எண்.87/2017), இதே போன்று கடந்த 30.3.2017 அன்று, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், திருவள்ளூர் சிலை அருகில் வளர்மதி உட்பட 13 நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்தைத் தடை செய்ததற்காக சேலம் நகர் காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கும் (கு.எண்.148/2017) பதிவு செய்யப்பட்டு, இரண்டு வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.

கடந்த 15.4.2017 அன்று, கரூர் மாவட்டம், குளித்தலை ரயில் நிலையம் அருகில் வளர்மதி உட்பட 7 பேர் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், பொது மக்களை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக குளித்தலை காவல் நிலையத்தில் வழக்கு (கு.எண்.277/2017) ஒன்று பதிவு செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

கடந்த 6.6.2017 அன்று, கோவை மாநகரில், மே-17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி என்பவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதைக் கண்டித்து, பொது நல மாணவர் எழுச்சி இயக்கத்தின் ஆதரவாளர்கள் 15 பேருடன் வளர்மதி தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டு, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக பந்தயச்சாலை காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று (கு.எண்.740/2017) பதிவு செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

வளர்மதி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதற்காவும், மாணவர்களைத் தூண்டிவிட்டு மாணவர் கிளர்ச்சியை ஏற்படுத்தியதற்காகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், அவர் தன்னை மாற்றிக் கொள்ளாமல், தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சேலம் மாநகர காவல் ஆணையாளர் வளர்மதியை 17.7.2017 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த வளர்மதி, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, எடுத்த உடனே யார் மீதும் குண்டர் சட்டம் போடவில்லை. எவ்வளவு வழக்கு, ஜனநாயகம் என்று ஆறு ஏழு முறை போராட்டம் வெளியே நடத்திக் கொண்டு இருந்தால் மாநில சட்ட ஒழுங்கை எப்படி பேணிக் காக்க முடியும். ஜனநாயகத்தில் போராடுவதற்கு உரிமை உண்டு. ஆனால் மக்களை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்ற போது குண்டர் சட்டம் கண்டிப்பாக பாயும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: