மின்னல் பண்பலை – தேசிய முன்னணியின் ஊதுகுழலா?

minnal2கணியன். 20.7.2017. ஆர்.டி.எம். தமிழ் வானொலி அலைவரிசையான மின்னல் பண்பலை, அரச வானொலி என்ற நிலையிலிருந்து வழுவி, தேசிய முன்னணியின் அலைவரிசையாக மாறி பல பத்து வருடங்கள் ஆகிவிட்டதை பொது மக்கள்  நன்கு அறிவார்கள். ஆனாலும், அண்மைக் காலமாக, மின்னல் பண்பலை வானொலி தேசிய முன்னணியின் ஊது குழலாகவே மாறிவிட்டது.

ஆர்டிஎம் வானொலி பொதுவாக நாட்டிற்குரியது. அது, ஆளுந்தரப்பினர், பொது மக்கள், எதிர்க்கட்சியினர் என எல்லாத்தரப்பினருக்கும் பொதுவானது. நாட்டை ஆளுவோரின் கொள்கை அறிவிப்பு, புதியத் திட்டங்கள் பற்றியெல்லாம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்ற கடமை வானொலிக்கு உண்டு. அதேப்போல, பொது மக்களின் கருத்திற்கும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்து விளக்கம், மறுப்புச் செய்திக்கெல்லாம்கூட இடமளிக்கப்பட வேண்டும். வானொலியைப் பொறுத்தவரை, இதுதான் உலகில் உள்ள பொதுவான நிலை.

ஆனால், இங்குள்ள மின்னல் பண்பலை வானொலியோ மலேசிய இந்தியச் சமுதாயத்திற்கான பிரச்சார பீரங்கியாக, தேசிய முன்னணி சார்பில் தொய்வில்லாமல் செயல்படுவதைக் கண்டு, தேசிய முன்னணி தலைமைப் பீடமோ  மஇகா தலைமையகமோ கொஞ்சமும் கவலைப்படுவதாகவோ மனம் கூசுவதாகவோ தெரியவில்லை.

பொருள்-சேவை வரி என்பது, இந்த நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் ஐக்கியமான ஒன்று. இதனால் மக்களுக்கு சாதகமா அல்லது பாதகமா என்பது பற்றி தேசிய அளவில் ஒருமித்த கருத்து இன்னும் எட்டப்படாத நிலையில், அரசுக்கு நன்மையானது என்றுமட்டும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

இப்படிப்பட்ட நிலையில், வரும் 14-ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால், ஜிஎஸ்டி என்னும் பொருள் சேவை வரியை அகற்றுவோம் என்று நம்பிக்கையுடன் சொன்ன கருத்தை மின்னல் வசதியாக இருட்டடிப்பு செய்துவிட்டது; மாறாக, அதைப் பற்றி விமர்சனம் செய்த அம்னோ தலைவர்களின் கருத்தை மட்டும் திரும்பத் திரும்ப மின்னல் வானொலி ஒலியேற்றியது.

மொத்தத்தில், ஆளுந்தரப்பினருக்குரிய ஊடகத்தைப் போல ஆர்டிஎம் வானொலிகள் செயல்படுகின்றன. இதில், மின்னல் வானொலி, முன்னிலையில் இருக்கிறது. தேசிய முன்னணிக்கு ஆதரவாக மேளம் தட்டும் பொதுமக்களின் கருத்து காலந்தோறும் இவ்வானொலியில் இடம்பெறும். எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்துகூட கடுகளவும் இடம்பெறுவதில்லை. மாறாக, ஆளுந்தரப்பினர் என்ன சொன்னாலும் அவற்றை அப்படியே ஒலிபரப்பும் ஆர்டிம் வானொலி-தொலைகாட்சி அலைவரிசைகள், எதிர்க்கட்சியினர்மீது ஆளுந்தரப்பினர் வசைமாரி பொழிந்தாலும் அதையும்  கொஞ்சமும் கூசாமல் ஒலிபரப்புகின்றன. இது, ஜனநாயகத் தன்மையை அப்பட்டமாக மீறுவதாகும்.

போகட்டும் என்று பொறுமை காக்கும் வேளையில், அன்றாடம் காலை 8.00 மணி செய்தியைத் தொடர்ந்து ஒலிபரப்பப்படும் ‘செய்தி விளக்கம்’, பெரும்பாலும் எதிர்க்கட்சியினரையும் தேசிய முன்னணிக்கு மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் சாடுவதற்கும் வசைபாடுவதற்கும்தான் பயன்படுத்தப் படுகிறது. அந்த வகையில்தான் ஜூலை 20-ஆம் நாள் காலையில் ஒலிபரப்பப்பட்ட செய்தி விளக்கத்தை ஒரு மூத்த செய்தியாளர் தயாரிக்க அதை மற்றொருவர் வாசித்தார்.

2050 தேசிய உருமாற்றத் திட்டம் (டி.என். 50)-ஐப் பற்றி விளக்கம் அளித்த வானொலி, பிரதமரின் சிந்தனையில் உதித்த அந்தத் திட்டம் சாதாரணத் திட்டம் அல்ல; நாட்டின் நீண்ட கால வளர்ச்சியையும் மக்களின் மேம்பாட்டையும் இலக்காகக் கொண்டு தீட்டப்பட்டது; 2020-இல் தொடங்கி 2050-இல் முடிவுறும் இந்தத் திட்டம் தற்பொழுது உருவாக்கம் பெற்று வருகிறது. பணப்பரிமாற்றமும் கடன்பற்று அட்டைப் பயன்பாடும் அற்ற நான்காவது தொழில்புரட்சிக்கு மக்களைத் தயார்ப்படுத்தும் அந்தத் திட்டம், இளைஞர்களுக்கு உந்து சக்தியை அளிக்க வல்லது என்றெல்லாம் சொல்லப்பட்ட அந்தக் கருத்து விளக்கத்தில், டி.என். 50ப் பற்றி விமர்சனம் செய்பவர்களை தூரநோக்குப் பார்வையற்றவர்கள் என்றெல்லாம் வசைபாடப்பட்டது.

அரச தகவல் சாதனத்தின் கிளை அமைப்பான மின்னல் பண்பலை கடைப்பிடிக்கும் ஜனநாயகக் கூறு இப்படித்தான் தொடர்கிறது; சில வேளைகளில் இழந்து வரும் மக்களின் நம்பிக்கையை மீட்க அவ்வப்போது நல்ல தகவல் பரிமாற்றத்தையும் ஒலிப்பரப்பும் இந்தப் பண்பலை ஒட்டு மொத்தத்தில் மக்களின் அதிருப்தியின் அறிகுறியாகவே உள்ளது.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • T.Sivalingam@Siva wrote on 20 July, 2017, 17:53

  திரு ராவின் , திரு மோகன் , திரு சசி ஆகியவர்களின் அறிவிப்பு , அவர்களின் புரியாத சிரிப்பு , ஏன் சிரிக்கிறார்கள் , எதற்கு சிரிக்கிறார்கள் என்பது யாருக்கும் இதுவரை புரிவது இல்லை , அதேபோல திரு ஜான்சன் சின்னப்பன் , திருமதி சரஸ்வதி கன்னியப்பன் இருவரின் தமிழ்மொழி உச்சரிப்பு , தெளிவுயின்மையான பேச்சு கேட்பது சகிக்கவில்லை . இதனை திருத்தி நல்கொணர மின்னல் எப் எம் தலைவர் ஆவணசெய்தார என்பது புரியாத புதிர் ? இவ்வாறுஇருக்க , தன்னிலையில் இருந்து விலகி செல்ல நேரிட்டால் , நேயர்களின் பயணம் பாதை மாறும் வழி வெகு தூரமில்லை எனலாம் .

 • அலை ஓசை wrote on 20 July, 2017, 18:15

  ஜய்யாRTMவானொலியைநான்பலஆண்டு
  களாகபார்பதேஇல்லை அதுபண்புகெட்டுப்
  போனவானொலிஒருதலைராகம்!

 • THOVANNA PAAVANNA wrote on 20 July, 2017, 19:10

  THR ராகவும் ஏறக்குறைய அப்படித்தான். நடு நிலையை கொண்டால் அப்புறம் சோறுக்கு திண்டாட்டம் என்பதை ஒலிப்பரப்பு நிலையங்கள் நன்றாகவே புரிந்துள்ளன.சோறுக்கு தாளம் போடுபவர்கள். ‘வித்வான் சோறு இல்லையென்றால் கத்துவான்’ என்பதற்கேற்ப நடத்துகிறார்கள்.அவர் நிலையில் எவரும் இதைத்தானே செய்வர்.இம்மாதிரியான மாற்றங்கள் வர இன்னும் அதிக காலம் பிடிக்கும்.

 • singam wrote on 20 July, 2017, 19:35

  தமிழ் வானொலி அலை வரிசை  இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என ஞாபகப் படுத்தியதற்கு நன்றி.

 • குமார ராஜா wrote on 20 July, 2017, 20:32

  கட்டுரை ஆசிரியர் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நாட்டுக்கு திரும்பியிருக்கிறாரோ என்று எண்னத் தோன்றுகிறது. காரணம், மின்னல் பொம்பலை மன்னிக்கவும் மின்னல் பண்பலை ரங்காயான் மேராவாகவும் ஒலி அலை 6-ஆகவும் இருந்ததற்கு முன்பிருந்தே இதே ஜால்ரா தான்.
  மற்றபடி வேறோர் வானொலிக்குப் போட்டியாகத் தன்னை எண்ணிக்கொண்டு நிகழ்ச்சிகளைப் படைப்பது பூனையைப் பார்த்து எதுவோ சூடு போட்டுக்கொண்ட கதைதான். ந்ல்ல தமிழ் உச்சரிப்பெல்லாம் மறைந்து ரொம்ப காலமாகி விட்டது.

 • hmdjfjr'q wrote on 20 July, 2017, 22:46

  வானொலி மக்களுக்கு நடு நிலையான செய்திகளை வெளியிடும் ஊடகமாக இருக்க வேண்டும். அதுதான் அதன் தார்மீக கடப்பாடு.
  ஆனால், அதிகார வர்க்கத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு, ஆளும் அரசுக்கு துதி பாடியும் பிறரின் நல்லவற்றைக்கூட ஒளி பரப்ப முடியாத அளவுக்கு மின்னல் பண்பலை தவிக்கிறது. மக்களை மடையர்கள் என்று நினைக்கிறது அரசு! கேவலம் , அவமானம் !

 • mugil wrote on 21 July, 2017, 14:43

  செத்துப்போனதை இன்னுமா பேசிகொண்டுஇருக்கிறீர்கள்

 • மு.த.நீலவாணன் wrote on 21 July, 2017, 15:05

  நண்பர் குமாரராஜா சொன்னது மிக சரியே ! கட்டுரையாளர் கணியன் பல ஆண்டுகாலமாக தூங்கிக்கொண்டிருந்தாரோ என்னவோ ?
  ” வாங்கும் போது பெரிய டின்னக வாங்குங்கள் ” என்று விளம்பரம் செயத ஆறுமுகம் காலத்திலேயே இந்த ” ஜால்ரா ” மணி சாமிவேலுவிற்கு ஒலிக்க தொடங்கி விட்டதே

 • மு.த.நீலவாணன் wrote on 21 July, 2017, 15:05

  நண்பர் குமாரராஜா சொன்னது மிக சரியே ! கட்டுரையாளர் கணியன் பல ஆண்டுகாலமாக தூங்கிக்கொண்டிருந்தாரோ என்னவோ ?
  ” வாங்கும் போது பெரிய டின்னக வாங்குங்கள் ” என்று விளம்பரம் செயத ஆறுமுகம் காலத்திலேயே இந்த ” ஜால்ரா ” மணி சாமிவேலுவிற்கு ஒலிக்க தொடங்கி விட்டதே!!!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)