‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்ச்சியில் மகாதீரை நோக்கி காலணி வீச்சு

1இன்று ஷா ஆலாம், இளைஞர் & கலாச்சார காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள, ராஜா மூடா மூசா மண்டபத்தில், டாக்டர் மகாதீர் கலந்துகொண்ட ‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்ச்சி வன்முறையில் முடிந்தது.

பங்கேற்பாளரின் மெமாலி தொடர்பான கேள்விக்கு, டாக்டர் மகாதீர் பதிலளித்த போது அவரை நோக்கி காலணிகள் வீசி எறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் கலவரம் வெடித்தது.

இருப்பினும், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த முன்னாள் பிரதமரை பத்திரமாக மண்டபத்திலிருந்து வெளியேற்றினர்.

மண்டபத்தில் கூடியிருந்தவர்கள் நாற்காலிகளைத் தூக்கி வீசத் தொடங்கியதால், நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. மேலும், அடையாளம் தெரியாதவர்களால் அம்மண்டபத்தில் தீச்சுடர்கள் விடுவிக்கப்பட்டதோடு பெர்சத்து ஆதரவாளர்களுக்கும் பிரச்சனைக்குக் காரணமான நபருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டதால், நிலைமை இன்னும் மோசமானது.

பெர்சத்து ஆதரவாளர்கள், ‘பெர்சத்து’ சட்டையை அணிந்திருந்த இரண்டு சந்தேக நபர்களைப் பிடித்து2 காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

“நிகழ்ச்சியில்  பங்கேற்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென, முன்னதாக நாங்கள் ஏற்பாட்டாளர்களிடம் கூறியிருந்தோம். ஆனால், இன்று என்ன நடந்தது என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் ஏற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைக்கவுள்ளோம்”, என போலிஸ் அதிகாரி ஷாஃபியான் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக வெளியாட்கள் யாரும் புகார் செய்யாவிட்டாலும், காவல்துறை ஏற்பாட்டாளர்களை விசாரணைக்குட்படுத்தும் எனவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, பெர்சத்து இளைஞர் தலைவர் (ஆர்மாடா) ஷேட் சட்டிக் ஷேட் அப்துல் ரஹ்மான் இச்சம்பவம் குறித்து தங்கள் கட்சி போலிஸ் புகார் ஒன்றை இன்றிரவு செய்யும் என்று கூறினார்.