ரோஹிஞ்சா பிரச்சனை: ‘சோகத்தை தடுத்து நிறுத்த ஆங் சான் சூச்சிக்கு கடைசி வாய்ப்பு’

suukyiமியான்மரில் இருந்து பல ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லீம்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு காரணமாக அமைந்த வன்முறை மற்றும் ராணுவ தாக்குதல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த அந்நாட்டின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு தற்போது கடைசி வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ், ”ஆங் சான் சூச்சி இது தொடர்பான தடுப்பு நடவடிக்கையில் தற்போது இறங்காவிட்டால், இந்த சோகம் மிக பயங்கரமானதாக அமையும்” என்று தெரிவித்தார்.

மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் இன அழிப்புக்கு வழிவகுக்கும் என்று ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

அப்பாவி குடிமக்கள் குறிவைக்கப்படுவதாக வரும் செய்திகள் குறித்து மறுப்பு தெரிவித்துள்ள மியான்மர் ராணுவம், தாங்கள் ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் வடக்கு ரகைன் மாகாணத்தில் போலீசார் மீது நடந்த தாக்குதல்களுக்கு பிறகு மியான்மர் ராணுவம் பதில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த வாரம் ஐ.நா. பொது சபை கூட்டம் நடக்கவுள்ள சூழலில், ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் பிபிசிக்கு அளித்த பேட்டியில், வரும் செவ்வாய்க்கிழமையன்று நாட்டு மக்களுக்கு ஆற்றவுள்ள உரையில் ராணுவ தாக்குதல் நடவடிக்கையை தடுத்த நிறுத்த சூச்சிக்கு கடைசி வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

”தனது நிலையை ஆங் சான் சூச்சி தற்போது மாற்றாவிட்டால், மியான்மரில் ஏற்பட்ட சோகம் முற்றிலும் பயங்கரமான ஒன்றாக மாறிவிடும். மேலும், இந்நிலை எதிர்காலத்தில் மாறும் வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை” என்று அன்டோனியோ கட்டெரஸ் கூறினார்.

தங்கள் நாட்டுக்கு ரோஹிஞ்சாக்கள் மீண்டும் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மாதம் ரகைன் மாகாணத்தில் வன்முறை வெடித்ததில் இருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிஞ்சா மக்கள் வங்கதேசத்திற்கு தப்பி சென்றுள்ளனர். பல கிராமங்கள் முழுமையாக எரிக்கப்பட்டுள்ளன.

பெளத்த மதம் பெரும்பான்மையாக உள்ள ரகைன் மாகாணத்தில் வாழ்ந்து வரும் ரோஹிஞ்சா இனமக்கள் (பெரும்பாலும் முஸ்லீம்கள்) நீண்ட காலமாக நாட்டில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

‘மியான்மரில் நடப்பது இன அழிப்புக்கான எடுத்துக்காட்டு’

முன்னதாக, பாதுகாப்பு நடவடிக்கை மூலம் மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது, “இன அழிப்புக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு போல இருக்கிறது” என ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் தெரிவித்திருந்தார்.

ரகைன் மாகாணத்தில் “மோசமான ராணுவ நடவடிக்கையை” முடிவுக்கு கொண்டு வர மியான்மர் அரசிடம் ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார். -BBC_Tamil