நஜிப்: இந்தியாவில் ஜிஎஸ்டி 28விழுக்காடு, மலேசியாவில் 6விழுக்காட்டுக்குக் குய்யோ முறையோ என்று கூச்சல்

gstபிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்,  வரிகட்டுவது   மலேசியர்களுக்குப்  பிடிக்காத   விசயம்   என்பது  அரசாங்கத்துக்கு   நல்லாவே    தெரியும்   என்றார்.

இன்று  மஇகா  தேசியப்  பேராளர்  கூட்டத்தில்    உரை  நிகழ்த்திய   நஜிப்,   மஇகா    தலைவர்   டாக்டர்   எஸ்.சுப்ரமணியம்  அவரது   உரையில்  இந்திய   மாணவர்களுக்குக்  கிடைக்கும்   தேசிய  உயர்க்கல்விக்  கடன் (பிடிபிடிஎன்) போதுமானதாக  இருப்பதில்லை   என்று  குறிப்பிட்டதைத்   தொட்டு  பேசினார்.

“பிடிபிடிஎன்  குறித்துக்  கூறப்பட்டதை   நான்  ஏற்கிறேன். அது   இந்தியர்  பிரச்னை  மட்டுமல்ல,  எல்லாச்  சமூகங்களையும்   பாதிக்கும்   ஒரு  பிரச்னை.  அதைக்  கவனமாக   ஆராய்வோம்.

“ஆனால்,  அதற்காக  வரிகளை  உயர்த்த  முடியாது.  ஏனென்றால்  வரி  செலுத்துவது   மலேசியர்களுக்குப்  பிடிக்காது. அவர்களுக்குப்  பிடித்தது   பொது  விடுமுறை,  உணவு”  என்றார்.

இந்தியாவில்  பொருள்,  சேவை   வரி (ஜிஎஸ்டி)  28விழுக்காடு  என்பதைப்  பிரதமர்   சுட்டிக்காட்டினார்.

“இங்கு  6விழுக்காடுதான்.  அதற்கே  மக்கள்   குய்யோ  முறையோ  என்று  கூச்சல்  போடுகிறார்கள்.  அரசாங்கத்தின்மீது    ஆத்திரப்படுகிறார்கள்.

“ஆனால்,  உண்மையில்    விலையை  உயர்த்துவது   வர்த்தகர்கள்தான்    அரசாங்கம்   அல்ல.  ஆனால்,  பழி   அரசாங்கத்தின்மீது.

“உலகில்  165  நாடுகளில்   ஜிஎஸ்டி  உண்டு.  இந்தியாவில்   அது   28 விழுக்காடு.  அதனால்  இந்திய  மலேசியர்கள்   அது   குறித்து   குறை   சொல்லக்கூடாது”,  என்று  நஜிப்  கூறினார்.