சுதந்திரம் பெற்றும் நாம் அடிமைப்பட்டுதான் கிடக்கிறோம்!

55 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் தமிழ்ப்பள்ளிகளும் இருக்கின்றன என்று இப்போதுதான் தமிழ்ச் சமுயாத்தைப் பிரதிநிதிப்பவர்களே அறிந்துக் கொள்ளக் கூடிய நேரம் வந்துள்ளது. அனைவரும் தமிழ்ப்பள்ளியின் தோற்றத்தையும் அதன் வசதிகளைப் பற்றியும் பேசுகின்றனர். நல்லுள்ளம் கொண்ட பலபேர் உதவுகின்றனர். முன்னாள் மாணவர்கள் பள்ளியை “திரும்பி பார்கின்றனர்”. இப்படியாக தமிழ்ப்பள்ளிகளைப் பற்றிய விழிப்புணர்வு சிறிதளவு மேலோங்கியிருப்பது மகிழ்ச்சி.

“Something is better than nothing” என்ற ஆங்கில பழமொழியுடன் இணைத்து பார்க்கிறேன். தமிழ்ப்பள்ளிகள் நம் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதே மிகப்பெரிய விடயமாகக் கருதுகிறேன். ஒருவேளை தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட 100 மில்லியன்தான் காரணமோ.

அரச சாற்பற்ற அமைப்புகள் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் இன்னல்களையும் மாணவர்களின் எதிர்நோக்கும் பிரச்னைகளயும் ஊடகங்களைப் பயன்படுத்தி வெளியிட்ட பின்னரே அரசாங்கத்தின் தலையீடு காணப்படுகிறது. அப்போதுதான் நம் தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்குகிறார்கள். யார் செய்ய வேண்டிய வேலையை யார் செய்வது? அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை அரசு சார்பற்ற அமைப்புகள் செய்கின்றன. அது ஒரு புறம் இருக்க, தமிழ்ப்பள்ளிகளை நாட்டில் இல்லாமல் செய்வதற்காக சிலரால் பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக குழி பறிக்கப்பட்டு, இன்று அந்தக் குழியில் 49% விழுந்து விட்டது.

“ஏன் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புறதில்லிங்க?” என்று கேட்டால் பலர் கூறும் பதில் “மலாய் ஸ்கூல்ல மலாய், இங்கிலீஸ் நல்லா சொல்லி தராங்க, எல்லா வசதியும் இருக்குங்க, வீட்டுக்கு பக்கத்துலே இருக்குங்க, தமிழ் ஸ்கூல்ல படிச்சு என்னாங்க பன்றது?” இப்படியாக நம் பெற்றோர்கள் பல விதமான காரணங்களை அடுக்குகிறார்கள். இதைச் சிலர் தனிமனித உரிமை என்றும் கூறுகின்றனர். உண்மையும் கூட. ஆனால், இவ்வகையான காரணங்களை பெற்றோர்கள் கூறுவதற்கான முதல் காரணம்; உரிமைகளை கேட்டு பெறாமல், நம் உரிமைகளை நாமே விட்டு கொடுத்து வாழ பழகிக்கொண்டதே காரணம்.

தமிழ்ப்பள்ளிகள் நமது உரிமை, தமிழ்மொழி நமது உரிமை, நடுநிலையான அரசாங்கம் நம் உரிமை, சமமான கல்வி நம் உரிமை. இந்த உரிமைகளெல்லாம் நம் சகிப்புத்தன்மையால் மெல்ல மெல்ல நம்மை அறியாமலேயே நம் கையிலிருந்து பறிக்கப்பட்டு வருகிறது. இதை நாம் உணராதவரை நமது உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.

ஒரு காலகட்டத்தில் நம் நாடு விவசாய நாடு. முதன்மை விவசாயமாக விளங்கியது இறப்பர். நாடு சுதந்திரம் அடைந்தபோதுதான் நாட்டின் முக்கிய வருமானமாக விளக்கியது இறப்பர் தொழில்துறை. அன்று இந்த நாட்டிற்கு உழைத்து கொட்டியது நாம். நாடு தொழில்துறையை நோக்கி வளரும் வரை இந்த நாடே தமிழர்களால்தான் இயங்கியது என்றால் அது மிகையாகாது. ஏனெனில் ஏனைய இறப்பர் தோட்டங்களிலும் பாடுபட்டவர்கள் தமிழர்கள். நாட்டிற்கு 70% வருமானம் இறப்பர் மூலமாகதான் கிடைத்துள்ளது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஏணிப் படியாக விளங்கிய ஒரு சமூகம் இன்று தவிடுபொடியாகும் நிலைமையில் இருக்கிறது; எவ்வளவு பெரிய கைமாறு.

தட்டுங்கள் திறக்கப்படும் என்ற ஏசுபிரானின் வாசகமே இன்று வேலைக்கு ஆகும். “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா தம்பி பழைய பொய்யடா” என்ற உண்மையை தமிழர்கள் உணர வேண்டும். ஒரு இனமே அதன் மொழியை வைத்துதான் அடையாளம் காணப்படுகிறது. அந்த அடையாளத்தையே இழக்க நம்மினத்தோர் பலர் துணிந்துவிட்டனர். இந்நிலை இப்படியே சென்று கொண்டிருந்தால், மலேசியாவில் ஒரு காலகட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் இருந்தது என்று நாம் இப்போது கூறிக்கொள்வது போல் ஒரு காலத்தில் மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் இருந்தன என்று நமது அடுத்த சந்ததியினர் கூறிக்கொள்வர்.

பெற்றோர்களின் பரவலான குற்றச்சாற்று ஒன்று இருக்கிறது. தமிழ்ப்பள்ளி தூரமாக இருக்கிறது என்பதுதான். உண்மைதான். ஆனால் இச்சிக்கலுக்கு மாற்று வழியே இல்லையா? ஒரு வீடமைப்பு பகுதியில் குடியேரும் நீங்கள் அங்கே தண்ணீர் வசதி, மின்சார வசதி, கட்டுமான கோளாறு என்ற பிரச்னைகள் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? உடனே அங்கு வீடு வாங்கியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசாங்கத்திடம் முறையிடுகிறீர்கள் அல்லவா? அதை ஏன் தமிழ்ப்பள்ளியை உங்கள் இருப்பிடத்திற்கு அருகாமையில் கொண்டுவர நீங்கள் கேட்கவில்லை? இது உங்களது உரிமை. இந்த வசிப்பிட பகுதியில் தமிழர்கள் நாங்கள் 500 அல்லது 1000 குடும்பங்கள் வசிக்கிறோம். நாங்கள் நிச்சயமாக எங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்குதான் அனுப்புவோம். கண்டிப்பாக எங்களுக்கு இங்கு ஒரு தமிழ்ப்பள்ளி வேண்டும் என்று உங்கள் உரிமையை ஏன் கேட்க மறுக்கிறீர்கள். நமக்கு அந்த அளவுக்கு சக்தி இல்லை என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருக்கிறது; உணருங்கள்.

அடுத்தக் குற்றச்சாட்டு “அங்க மலாய் பாடமும், இங்கிலீஸ் பாடமும் நல்லா சொல்லி தராங்க”. இங்குதான் தமிழ்பள்ளிகளில் பயிலும் மாணவர்களையும் பெற்றோர்களையும் அரசாங்க ஏமாற்றுகிறது. நமக்கு சமமான கல்வி வழங்கப்படவில்லை என்று இங்கே புலப்படுகிறது. எப்படி என்று கேட்டால், முதலில் தேசியப் பள்ளியில் தேசிய மொழி போதிக்கும் அனைத்து ஆசிரியர்களும் தேசிய மொழியில் புலம்பெற்வர்கள் ‘ஒப்சனிஸ்ட்’. ஆனால், தமிழ்ப்பள்ளிகளில் அவ்வகையாக தேசிய மொழியில் புலமைப்பெற்ற ஆசிரியர்கள் இல்லை. தமிழ்பள்ளியில் போதிக்கும் தேசிய மொழி ஆசிரியர்கள் தங்களின் சொந்த அனுபவத்தில் போதிக்கின்றார்களே தவிர அதற்கான முறையான பயிற்சி பெறவில்லை. இதே நிலைதான் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியருக்கும். தேசியப் பள்ளிகளில் பெரும்பாலான ஆங்கில ஆசிரியர்கள் தமிழர்களே என்பது உண்மை. அப்படியானால் ஏன் வேற்று இன ஆசிரியர்களை ஏற்க மறுக்கிறீர்கள் என்று கேட்பவரும் இருப்பீர்கள்.

யுனெஸ்கோ எனும் உலக அமைப்பு தொடக்க கல்வித் திட்டத்தில் வேற்று மொழி போதிக்கும் ஆசிரியருக்கு கண்டிப்பாக அந்த மாணவனின் தாய்மொழியும் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது. இப்படியாக, இசைக்கல்வி, கலைகல்வி, வாழ்வியல் கல்வி என்று எந்தப்பாடத்திற்குமே புலமை பெற்ற ஆசிரியர்கள் இல்லை. இருப்பவர்கள் அனைவரும் தமிழ் மொழியை முதன்மை பாடமாக எடுத்து படித்தவர்கள்தான். இந்த நிலையை அறிந்து உங்களுடைய பிள்ளைகளுக்கும் தேசியப் பள்ளியில் பயிலும் மாணவனைப்போல் கல்வி கிடைக்க வேண்டும் என்று அறியாமல் அது உங்களது உரிமை என்று உணராமல் வெகுவிரைவில் உரிமையை விட்டுக்கொடுத்து விடுகிறீர்கள்.

பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக இந்த உரிமைக்கு குரல் கொடுங்கள். எங்கள் பிள்ளைகளுக்கும் அந்தந்த துறைகளில் புலம்பெற்ற தமிழாசிரியர்களை வழங்குங்கள் என்று கேளுங்கள். நீங்கள் கேட்ட பிறகுதான் நம் சமுதாயத் தலைவருக்கே அது தெரியும். கல்வித்துறையை பிண்ணனியாகக் கொண்ட தலைவருக்கும் இது புலப்படாமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது. இப்படியாக கேட்காமல் கொடுக்கப்பட வேண்டிய பல உரிமைகள் நம்மிடமிருந்து தட்டிப்பறிக்கப்பட்ட வண்ணமாகவே உள்ளது. இன்னமும் நாம் வாயை மூடிக்கொண்டிருந்தால் எதுவும் நடக்காது.

புதிய பிரதமரின் தலைமையில் பெர்லிஸ் முதல் ஜொகூர் வரை அனைத்து கோயில்களும் மாணியம் பெற்று கட்டுமானம், மறுசீரமைப்பு என்று பல வேலைகள் நடந்த வண்ணம் உள்ளது. ஏனெனில் அரசியல்வாதிகள் கோயில் தமிழர்களுக்கு அவசியமான ஒன்று என்று நம்புகிறார்கள் அதனால்தான் அவ்வளவு மானியம். அதைப்போன்று, தமிழ்ப்பள்ளியும் தமிழர்களுக்கு முக்கியமானது என்று நாம் உணர்த்த வேண்டும், பள்ளிகளில் வாரியம் அமைத்து வாரியத்தின் மூலம் இயங்க வேண்டும்.

மற்ற பள்ளிகளில் மற்ற மாணவர்களுக்கு கிடைக்கும் அதே திறத்திலான கல்வியை என் பிள்ளையும் பெற வேண்டும் அதை எனது சொத்தான தமிழ்ப்பள்ளியில்தான் பெற வேண்டும் எண்ணம் ஒவ்வொரு தமிழரிடத்திலும் உதயமாக வேண்டும். சுதந்திரம் பெற்றும் அடிமைப்பட்டுதான் கிடக்கிறோம். மீண்டும் ஒரு சுதந்திரதை நோக்கிச் செல்வோம் வாருங்கள்.

– உமாகுமரன்