நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது (விரிவான செய்தி)

Parliament dissolvedபல மாதங்களாக வாக்காளர்களை ஊகிக்கவிட்டு வேடிக்கை பார்த்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார்.

இன்று காலை பேரரசரைச் சந்தித்த பின்னர், காலை மணி 11.30க்கு தொலைக்காட்சியில் நஜிப் அந்த அறிவிப்பைச் செய்தார்.

இனி, தேர்தல் ஆணையம் (இசி) தேர்தலுக்கான நாளை நிர்ணயம் செய்யும். அதை 60 நாள்களுக்குள் நடத்தியாக வேண்டும். தேர்தல் மே மாதத் தொடக்கத்தில் அது நடத்தப்படும் என்பதே பலரது கணிப்பு.

2009, ஏப்ரல் 3-இல், அப்துல்லா அஹமட் படாவியிடமிருந்து நஜிப் பிரதமர் பதவியை ஏற்று இன்றுடன் சரியாக நான்கு ஆண்டுகள் ஆகின்றன. பிரதமர் என்ற முறையில் அவர் சந்திக்கப்போகும் முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும்.

1najib22008-இல் அப்துல்லாவின் தலைமையில் பிஎன் ஐந்து மாநிலங்களை இழந்து மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. நாடாளுமன்றத்தில் நீண்ட காலம் கைவசம் வைத்திருந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையையும் அது பறிகொடுத்தது.

222 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பிஎன்-னிடமிருப்பவை 137 இடங்கள். பக்காத்தான் ரக்யாட்டிடம் 75 இடங்கள். மற்ற பத்து இடங்கள் சுயேச்சைகளிடமும் இதர மூன்று கட்சிகளிடமும் உள்ளன.

இப்போது நான்கு மாநிலங்கள்- சிலாங்கூர், பினாங்கு, கிளந்தான், கெடா- பக்காத்தான் வசமுள்ளன.  பிஎன்னிடம்  உள்ளவை ஒன்பது.

இந்தத் தடவை  பிஎன்னை ஆட்சியிலிருந்து இறக்கி அன்வார் இப்ராகிமைப் பிரதமராக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஒரு வலுவான அணி நஜிப்புக்கு எதிராக திரண்டிருப்பதாய்க் கருதப்படுகிறது.

இந்தத் தேர்தலில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். 2008-க்குப் பிறகு 3 மில்லியன் வாக்காளர்கள் புதிதாக பதிந்து கொண்டிருக்கிறார்கள்.